என் சிறுவயதில் நாங்கள் (அம்மா, அக்கா, தம்பி, தாய்வழிப் பாட்டி, தாத்தா) வாழ்ந்தது, திருவல்லிக்கேணியின் பழைய வீடுகளுக்கே உரித்தான அமைப்பு (அகலவாக்கில் சுமார் 14 அடி, நீநீ... நீளவாக்கில் சுமார் 120 அடி!) கொண்ட ஒரு வீட்டில், ஒண்டுக் குடித்தனத்தில் தான். அவ்வீட்டில் எங்களோடு சேர்த்து நான்கு குடும்பங்கள் இருந்தன. அனைவரின் சமையலறைகளும் வீட்டின் தரைப்பகுதியிலும், கூடம் மற்றும் படுக்கை அறைகள் மாடியிலும் அமைந்த ஒரு வித்தியாசமான வீடு அது! உண்பது கீழே! உறங்குவது மேலே (வானொலியில் ஒலிச்சித்திரத்தை கேட்ட பின்னர்)! இரவு வேளைகளில் (9 மணிக்கு மேல்) வீட்டின் கீழ்ப்பகுதியில் பொதுவாக ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்பதால், சமையலறைகளுக்கு அப்பால், வீட்டின் பின்கோடியில் அமைந்த கழிவறைகளுக்கு, மாடியிலிருந்து இறங்கி, இருட்டில் செல்ல சிறியவர்களுக்கு மிகுந்த தைரியம் தேவைப்பட்டது!!! அந்த இக்கட்டான நேரங்களில், துணிவை வரவழைத்துக் கொள்ள ஒரு MGR பாடலையோ அல்லது ஆஞ்சநேயர் ஸ்லோகத்தையோ முணுமுணுத்துக் கொண்டே செல்வது என் பழக்கம்!
அக்கால கட்டத்தில்,எங்களது தூரத்து உறவினர் ஒருவர் என் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்து வந்தார். தந்தையில்லாக் குழந்தைகள் என்று எங்களிடம் மிகுந்த அன்பு செலுத்தினார். அவரை, 'பஜணா' மாமா என்ற 'காரணப்பெயர்' கொண்டழைப்போம்! மாமா அவரது 6-வது வயதில் திருவல்லிக்கேணி வழியாக நடைப்பயணமாக திருமழிசை சென்று கொண்டிருந்த ஒரு பஜணை கோஷ்டியின் பின்னே, கான மயக்கத்தில் சென்று விட்டாராம்! பின்னர், ஒரு பெரிய தேடலுக்குப் பின் மீட்கப்பட்டு, வீடு வந்து சேர்ந்தாராம்! (இதெல்லாம் மாமாவின் தாயார் கூறியது)
அவர் எங்களுக்கு படிப்பு சொல்லித் தருவார். எங்களை திரைப்படம், சர்க்க்ஸ் (ஜெமினி!), மெரீனா கடற்கரை, தீவுத்திடலில் நடக்கும் பொருட்காட்சிகளுக்கு கூட்டிச் செல்வார். மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை, 'ரத்னா கபே' உணவகத்திலிருந்து, காலை சிற்றுண்டி (இன்றும் இட்லி, வடை, முக்கியமாக சாம்பார் அவ்விடத்தில் மிக பிரசித்தம்! சிலர் சாம்பாரை குடிக்கவே செய்வார்கள்!) என்னை வாங்கி வரச் சொல்லி, எங்களோடு சேர்ந்துண்பார். தந்தையார் உயிரோடு இருந்திருந்தால் கூட, அவர் அளவுக்கு இருந்திருப்பாரா என்று எங்களை சில தருணங்களில் எண்ணிப் பார்க்க வைத்திருக்கிறார்! நான் பள்ளியில் பல பரிசுகளை வென்றபோதும், எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தபோதும், அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
கதை கூறுவதில் அவரிடம் ஒரு அசாத்திய திறமை இருந்தது. குறிப்பாக, பல விக்ரமாதித்தன் மற்றும் மஹாபாரதக் கதைகளை மிக அழகாக விவரிப்பார். அவர் தனது நண்பர்களுடன் பார்த்து ரசித்த ஒரு திரைப்படக்கதையை, அப்படத்தின் திரைக்கதாசிரியரையே மிஞ்சும் வகையில், எங்கள் கவனம் சிறிதும் சிதறா வண்ணம், கிட்டத்தட்ட 2 மணி நேரம் கோர்வையாக எடுத்துரைப்பதில் அவருக்கு நிகர் அவரே! ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர், அவருக்கு என் குடும்பத்தில் உள்ள ஒருவரிடம் ஏற்பட்ட சிறு மனத்தாங்கல் காரணமாக, உறவில் விரிசல் ஏற்பட்டு, தற்போது எங்களிடையே அதிக பேச்சு வார்த்தை இல்லாவிட்டாலும் கூட, அவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
பிறருக்கு உதவும் மனப்பான்மை என்னிடம் இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். செஸ், டிரேட் (Monopoly) மற்றும் சீட்டில் சில ஆட்டங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவரே. பின்னாளில் செஸ் அறிவை கூர் தீட்டிக் கொண்டு, GCT-யில் படித்த 4 ஆண்டுகளிலும் கல்லூரி சாம்பியனாகத் திகழ்ந்தேன். 'Literature', 'Patience'(Solitaire போன்றது) மற்றும் 'Trump' போன்ற சீட்டாடங்கள் நிறைய ஆடியிருக்கிறோம். அதிலும் 'லிடரேச்சர்' நமது ஞாபக சக்திக்கு வேலை தரும் அருமையான விளையாட்டு. 4 அல்லது 6 பேர் எதிராடலாம்.
இந்த ஆட்டத்தின் நோக்கம், பலரிடம் பிரிந்திருக்கும் ஒரு ஜாதியை சேர்ந்த சீட்டுக்களை ஒருவர் சேகரித்து, SET சேர்க்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு ஜாதியிலும் A K Q J 10 9 - சீட்டுக்கள் ஒரு SET; 2 3 4 5 6 7 8 - சீட்டுக்கள் ஒரு SET! மொத்த சீட்டுக்களை குலுக்கி ஆட்டக்காரர்களுக்கு பகிர்ந்தளத்த பின், எவரிடம் A Spade உள்ளதோ, அவர் ஆட்டத்தைத் தொடங்கி, சக ஆட்டக்காரர் ஒருவரிடம் தனக்கு வேண்டிய சீட்டு உள்ளதா என வினவுவார். இருந்தால் அதைப் பெற்றுக் கொண்டு, சீட்டை இழந்தவரிடமோ அல்லது மற்றொரு ஆட்டக்காரரிடமோ தனக்கு வேண்டிய அடுத்த சீட்டைக் கேட்டு ஆட்டத்தைத் தொடருவார். அவர் கேட்ட சீட்டு இல்லாத பட்சத்தில், கேட்கப்பட்ட நபர், சீட்டை விளித்து வாங்கும் உரிமை பெற்று, ஆட்டத்தைத் தொடருவார். இதில், சுவாரசியமான விஷயம் ஒன்று உண்டு! ஒருவர், மிகவும் போராடி, ஒரு SET-இல் ஒரு சீட்டைத் தவிர மற்றதை கையகப்படுத்தியிருக்கும் நிலையில், அந்த ஒற்றைச் சீட்டுக்கு சொந்தக்காரர், மற்றனைத்தையும், அவரிடமிருந்து விளித்துப் பிடுங்கி, அழகாக SET சேர்த்து விடுவார்!!!
இக்கட்டுரையை, திருவல்லிக்கேணியில் வாலாஜா சாலையில் அமைந்திருந்த பாரகன் (Paragon தற்போது இடிக்கப்பட்டு அங்கே வானளாவிய அடுக்கு மாடிக் கட்டிடம் தோன்றி விட்டது!) தியேட்டரில் நான் பலமுறை கண்டு களித்த 'இராஜ ராஜ சோழன்' திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடும், என் ஞாபகத்தில் இன்றும் சிறகடிக்கும், வசன பாடல் வரிகளோடு நிறைவு செய்கிறேன்.
தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்!
அவள் தென்மதுரைக் கோயிலிலே சங்கம் வளர்த்தாள்!
தஞ்சையிலே குடி புகுந்து மங்கலம் தந்தாள்! அவள்,
தரணியெலாம் புகழ் பரப்பும் தாயென வந்தாள்,தமிழ்த் தாயென வந்தாள்!
என்றென்றும் அன்புடன்
பாலா